100-வது டெஸ்ட் போட்டியில் கும்ப்ளேவின் சாதனையை தகர்த்து வரலாற்று சாதனை படைத்த அஸ்வின்
|இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் அஸ்வின் 5 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.
தர்மசாலா,
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, முதல் இன்னிங்சில் 218 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 477 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது.
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 110 ரன்களும், ரோகித் 103 ரன்களும் குவித்தனர். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக சோயப் பஷீர் 5 விக்கெட்டுகளும், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் டாம் ஹார்ட்லி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் 259 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் சுழலில் சிக்கி திணறியது. அவரது பந்துவீச்சில் இங்கிலாந்து வீரர்கள் ஜாக் கிராலி, டக்கெட் , ஒல்லி போப் , கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பென் போக்ஸ் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய அவர், தனது 100-வது டெஸ்ட் போட்டியில் வரலாற்று சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
அதன் விவரம் பின்வருமாறு:-
இந்த போட்டியில் 5-விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற கும்ப்ளேவின் (35 முறை) சாதனையை தகர்த்துள்ள அஸ்வின் ( 36 முறை) புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.