குஜராத் அணியின் முக்கிய வீரராக ஷாருக்கான் இருப்பார் - பயிற்சியாளர் நெஹரா பேட்டி
|ஐ.பி.எல். கிரிக்கெட்டில் குஜராத் அணிக்கு பின்வரிசையில் முக்கிய பங்களிப்பு அளிக்கும் வீரராக ஷாருக்கான் இருப்பார் என்று பயிற்சியாளர் நெஹரா கூறியுள்ளார்.
புதுடெல்லி,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுகம் ஆன முதல் ஆண்டிலேயே (2022) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி கவனத்தை ஈர்த்தது. கடந்த ஆண்டு இறுதிப்போட்டியில் சென்னையிடம் தோல்வியை தழுவியது.
இவ்விரு சீசனிலும் அந்த அணியை வழிநடத்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் மும்பை இந்தியன்சுக்கு திரும்பி விட்டதால், குஜராத்தின் கேப்டனாக இளம் பேட்ஸ்மேன் சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் பாண்ட்யா இல்லாதது நிச்சயம் குஜராத்துக்கு பின்னடைவு தான். இந்த நிலையில் குஜராத் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹரா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
சுப்மன்கில் அணியை எப்படி வழிநடத்தப்போகிறார் என்பதை பார்க்க நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும் ஆர்வமாக இருக்கிறது. இந்திய அணிக்காக மூன்று வடிவிலான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருபவர் கில். எனவே நாங்கள் ஒரு அணி நிர்வாகியாக, பயிற்சியாளர்களாக அவரை கேப்டன் என்பதை விட ஒரு சிறந்த நபராக மேம்படுத்துவதற்கு உதவ இருப்பது உண்மையிலேயே உற்சாகமூட்டுகிறது. ஒரு நபராக அவர் வளர்ந்து விட்டால், அதன்பிறகு கேப்டன்ஷிப்பில் ஜொலிக்க தொடங்கி விடுவார்.
ஐ.பி.எல். நீண்டநாள் நடக்கும் ஒரு போட்டித் தொடர். நாலைந்து போட்டிகள் விளையாடினால் போதும் என்று இருந்து விட முடியாது. அது மட்டுமின்றி போட்டி நடக்கும் மே மாதத்தில் சீதோஷ்ண நிலை கடினமாக இருக்கும். வீரர்கள் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் சிரமப்படுவார்கள். காயங்களும் ஏற்படலாம். எனவே அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் முக்கியமானவர்கள்.
வேகப்பந்து வீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சன் (ஆஸ்திரேலியா), ஆல்-ரவுண்டர் அஸ்மத்துல்லா ஒமர்ஜாய் (ஆப்கானிஸ்தான்) ஆகியோர் புதிதாக அணியில் இணைகிறார்கள். ஜான்சன் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிறப்பாக விளையாடி உள்ளார். ஒமர்ஜாய் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு திறமையில் உலகத் தரம் வாய்ந்த ஆல்-ரவுண்டராக விளங்குகிறார். இருவருக்கும் இந்த சீசன் சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன். அணியில் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை வாய்ந்த வீரர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லையே என்று கேட்கிறீர்கள். அந்த பணியை செய்யக்கூடிய முக்கிய வீரராக இந்த முறை ஆல்-ரவுண்டர் ஷாருக்கான் (தமிழக வீரர் ரூ.7.4 கோடிக்கு வாங்கப்பட்டார்) இருக்கப்போகிறார்.
முகமது ஷமி, ஹர்திக் பாண்ட்யா ஆகியோரின் இடத்தை நிரப்புவது எளிதல்ல, என்றாலும் அவர்களது இடத்தில் இறங்குவதற்கு போதுமான வீரர்கள் இருக்கிறார்கள். வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 10-12 ஆண்டுகள் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர். சாய் கிஷோர் கடந்த ஆண்டில் களம் காணவில்லை. ஆனாலும் நல்ல நிலையில் உள்ளார். எனவே ஒவ்வொரு ஆண்டும் வருகை தரும் புதிய வீரர்கள் அசத்துவார்கள் என்ற நம்பிக்கையுடன் தயாராக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குஜராத் அணி தனது முதல் லீக்கில் வருகிற 24-ந்தேதி மும்பை இந்தியன்சை ஆமதாபாத்தில் சந்திக்கிறது.