ஆஷஸ் டெஸ்ட் : இங்கிலாந்து , ஆஸ்திரேலிய அணிக்கு அபராதம்
|இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது.
லண்டன்,
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் போட்டி இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது.பர்மிங்காமில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 386 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
7 ரன்கள் முன்னிலையுடன் 2-ம் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 273 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து, 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி , நான்காம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது. கடைசி நாளான நேற்று ஆஸ்திரேலியா வெற்றி பெற 174 ரன்கள் தேவைப்பட்டது.
இந்த சூழலில் 5வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 92.3 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது.
இதனைத்தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற புள்ளிக்கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது.
இந்த நிலையில் இந்த போட்டியில் பந்துவீச அதிகநேரம் எடுத்துக்கொண்டதற்காக இரு அணிக்கும் போட்டி கட்டணத்தில் தலா 40 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி உத்திரவிட்டுள்ளது.