ஆஷஸ் டெஸ்ட்: 4-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 107/3
|ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவுக்கு 281 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
பர்மிங்காம்,
இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 393 ரன்களும், ஆஸ்திரேலியா 386 ரன்களும் எடுத்தன. 7 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 3-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 28 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட், ஆலி போப் களத்தில் இருந்தனர். 3-வது நாளில் பெரும்பகுதி ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டன. 32.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன.
இந்த நிலையில் 4-வது நாளான நேற்று இங்கிலாந்து தொடர்ந்து பேட்டிங் செய்தது. ஜோ ரூட், கம்மின்ஸ் வீசிய முதல் பந்தையே 'ரிவர்ஸ் ஸ்வீப்' வகையில் விரட்ட முயற்சித்து ஆச்சரியப்படுத்தினார். தொடர்ந்து ஸ்காட் போலன்ட் ஓவரில் ஒரு சிக்சரும், 2 பவுண்டரியும் ஓடவிட்டார். மறுமுனையில் ஆலி போப் (14 ரன்) கம்மின்சின் யார்க்கரில் கிளீன் போல்டு ஆனார்.
4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட்டும், ஹாரி புரூக்கும் கைகோர்த்து தடாலடியாக மட்டையை சுழற்றினர். முதல் ஒரு மணி நேரத்தில் 13.3 ஓவர்களில் 93 ரன்கள் திரட்டினர். ஆனால் இந்த ஜோடி பிரிந்ததும் ரன்வேகம் தளர்ந்தது. ஜோ ரூட் (46 ரன், 55 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் வீசிய பந்தை கிரீசை விட்டு இறங்கி வந்து சிக்சருக்கு தூக்க முயற்சித்தார். பந்து ஏமாற்றவே, விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஸ்டம்பிங் செய்தார். ஜோ ரூட் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் ஸ்டம்பிங் ஆனது இதுவே முதல்முறையாகும். சிறிது நேரத்தில் ஹாரி புரூக் 46 ரன்னிலும் அடுத்து வந்த ஜானி பேர்ஸ்டோ 20 ரன்னிலும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 43 ரன்னிலும், ஆலி ராபின்சன் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
281 ரன் இலக்கு
தேனீர் இடைவேளைக்கு முன்பாக இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 66.2 ஓவர்களில் 273 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ், நாதன் லயன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 281 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த மைதானத்தில் இதற்கு முன்பு இரண்டு முறை இதற்கு மேலான இலக்கு வெற்றிகரமாக எட்டப்பட்டு இருக்கிறது. இதனால் நம்பிக்கையுடன் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.
ஆஸ்திரேலியாவுக்கு 3 விக்கெட்
டேவிட் வார்னர் 36 ரன்னிலும், அடுத்து வந்த லபுஸ்சேன் 13 ரன்னிலும் ஸ்டீவன் சுமித் 6 ரன்னிலும் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவிடம் சிக்கினர். 30 ஓவர் முடிந்திருந்த போது ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது உஸ்மான் கவாஜா (34 ரன்கள்), போலன்ட் (13 ரன்கள்) ஆகியோர் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.
இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.