ஆஷஸ் கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலியா அணி சிறப்பான தொடக்கம்..!!
|இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 4-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பின்றி 135 ரன்கள் எடுத்துள்ளது.
லண்டன்,
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரில் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் நடந்து வருகிறது. இதில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 283 ரன்னில் ஆட்டமிழந்தது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 103.1 ஓவர்களில் 295 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. 12 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 80 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 389 ரன்கள் குவித்து 377 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது. ஸ்டூவர்ட் பிராட் 2 ரன்னுடனும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டும், டாட் மர்பி 3 விக்கெட்டும் ஹேசில் வுட் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தி இருந்தனர்.
இந்நிலையில் 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடக்கத்திலே ஜேம்ஸ் ஆண்டர்சன் 8 ரன்களில் மர்பி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி 395 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது. இதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு 384 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணியின் தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 மற்றும் டாட் மர்பி ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளும், ஹேசில் வுட் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 384 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணியின் சார்பில் டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் களமிறங்கினர். சிறப்பான தொடக்கம் தந்த இந்த ஜோடியில், கவாஜா மற்றும் டேவிட் வார்னர் தங்களது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினர்.
பின்னர் 4-ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அப்போது ஆஸ்திரேலியா அணி 38 ஒவர்களில் விக்கெட் இழப்பின்றி 135 ரன்கள் எடுத்திருந்தது. டேவிட் வார்னர் 58 ரன்களும், உஸ்வான் கவாஜா 69 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
நாளை 5-ஆம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. போட்டியின் கடைசி தினமான நாளை ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற இன்னும் 249 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.