< Back
கிரிக்கெட்
ஆஷஸ் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றுமா? - 3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
கிரிக்கெட்

ஆஷஸ் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றுமா? - 3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்

தினத்தந்தி
|
6 July 2023 8:01 AM IST

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் கிரிக்கெட்டில் தொடரை வெல்லும் உத்வேகத்துடன் ஆஸ்திரேலியா இன்று 3-வது டெஸ்டில் களம் இறங்குகிறது.

ஹெட்டிங்லே,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பர்மிங்காம் மற்றும் லண்டன் லார்ட்சில் நடந்த முதல் இரு டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் உள்ள ஹெட்டிங்லேயில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணியினரும் சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

43 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து போராடி தோல்வியை தழுவிய லார்ட்ஸ் டெஸ்டில் ஜானி பேர்ஸ்டோ அவுட் விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. ஆஸ்திரேலிய பவுலர் வீசிய ஷாட்பிட்ச் பந்தை குனிந்து தவிர்த்து விட்டு, எதிர்முனையில் நின்ற பேட்ஸ்மேனுடன் பேசுவதற்காக பேர்ஸ்டோ சில அடி கிரீசை விட்டு நகர்ந்து சென்ற போது, ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி பந்தை ஸ்டம்பு மீது எறிந்து அவுட் செய்தார். விதிப்படி இது அவுட் என்றாலும், உண்மையான விளையாட்டின் உத்வேகத்துக்கு நல்லதல்ல, இந்த மாதிரி வெற்றியை நாங்கள் ஒரு போதும் விரும்பமாட்டோம் என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கடுமையாக விமர்சித்தார். அத்துடன் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு எதிராக இங்கிலாந்து ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். எம்.சி.சி. உறுப்பினர்களும் ஆஸ்திரேலிய வீரர்களுடன் வாக்குவாதம் செய்தனர்.



இங்கிலாந்து அணியில் 3 மாற்றம்

இப்படிப்பட்ட சூழலில் ஆரம்பிக்கும் 3-வது டெஸ்டில் இந்த விவகாரம் நிச்சயம் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹெட்டிங்லே பேர்ஸ்டோவின் சொந்த ஊர் மைதானமாகும். அதனால் ரசிகர்கள் வெறுப்புணர்ச்சியை ஆஸ்திரேலிய வீரர்கள் மீது கொட்டிக்கொண்டே இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இதனால் இந்த போட்டிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தங்கள் குடும்பத்தினருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்த டெஸ்டில் எழுச்சி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறது. இதிலும் தோற்றால் 22 ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் முதல் முறையாக ஆஷஸ் தொடரை இழக்கும் நிலை உருவாகும். எனவே இங்கிலாந்து வீரர்கள் ஒருங்கிணைந்து முழு திறமையை வெளிப்படுத்தியாக வேண்டும். 3-வது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியில் அதிரடியாக 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் 2 டெஸ்டில் சேர்த்து 3 விக்கெட் மட்டுமே எடுத்ததால் கழற்றிவிடப்பட்டு இருக்கிறார். அத்துடன் காயமடைந்த துணை கேப்டன் ஆலி போப் மற்றும் ஜோஷ் டங்கும் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், மொயீன் அலி ஆகியோர் ஆடும் லெவனில் சேர்க்கப்படுவதாக கேப்டன் ஸ்டோக்ஸ் நிருபர்களிடம் தெரிவித்தார்.



100-வது டெஸ்டில் சுமித்

அதே சமயம் பேர்ஸ்டோ பிரச்சினையை ஓரங்கட்டிவிட்டு 3-வது டெஸ்டிலும் ஆதிக்கம் செலுத்துவது எப்படி என்பதிலேயே ஆஸ்திரேலியாவின் முழு கவனமும் உள்ளது. முந்தைய டெஸ்டில் சதம் விளாசி ஆட்டநாயகனாக ஜொலித்த ஸ்டீவன் சுமித்துக்கு இது 100-வது டெஸ்டாகும். செஞ்சுரி டெஸ்டில் நுழையும் வீரர்களிலேயே அதிகபட்ச சராசரியை (59.56) கொண்டவராக திகழும் சுமித் இந்த டெஸ்டிலும் முத்திரை பதிக்கும் ஆவலுடன் தயாராகி வருகிறார்.

லார்ட்சில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் சரமாரியான பவுன்சர் பந்துகளை போட்டு இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு குடைச்சல் கொடுத்தனர். ஹெட்டிங்லே ஆடுகளத்தில் ஓரளவு புற்கள் இருக்கிறது. இதனால் பந்து நன்கு பவுன்ஸ் ஆகும் என்று கணிக்கப்பட்டு இருப்பதால் ஆஸ்திரேலிய பவுலர்கள் தங்களது 'பவுன்சர்' யுக்தியை இங்கும் தொடரும் முனைப்புடன் செயல்படுகிறார்கள்.

பின்னங்காலில் காயமடைந்த சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் தொடரில் இருந்து ஒதுங்கி விட்டதால் அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் டாட் மர்பி இடம் பெறுவார் என்று தெரிகிறது. மற்றபடி மாற்றம் இருக்காது. இந்த மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி இதுவரை 26 டெஸ்டில் விளையாடி 9-ல் வெற்றியும், 9-ல் தோல்வியும், 8-ல் டிராவும் கண்டுள்ளது.



பிற்பகல் 3.30 மணிக்கு...

போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

இங்கிலாந்து: ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஹாரி புரூக், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், ஆலி ராபின்சன், ஸ்டூவர்ட் பிராட்.

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் சுமித், லபுஸ்சேன், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், டாட் மர்பி.

இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் டென்5 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. வானிலை ஆய்வு மையத் தகவல்படி முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

மேலும் செய்திகள்