ஆஷஸ் 4-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 317 ரன்களில் ஆல்அவுட்...!!
|இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 317 ரன்களில் ஆல்அவுட் ஆகி உள்ளது.
மான்செஸ்டர்,
பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. அனல் பறக்கும் இந்த தொடரில் முதல் இரு டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், திரில்லிங்கான 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றியை ருசித்தன. தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நேற்று தொடங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது.
ஆஸ்திரேலிய அணியின் வார்னர் மற்றும் கவாஜா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் உஸ்மான் கவாஜா 3 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து டேவிட் வார்னர் 32 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய ஸ்டீவின் ஸ்மித் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து மார்னஸ் அரை சதம் அடித்து 51 ரன்களில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 48 ரன்களும், கேமரூன் கிரீன் 16 ரன்களும், மிட்செல் மார்ஷ் 51 ரன்களும், அலெக்ஸ் காரே 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 83 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்து இருந்தது. மிட்செல் ஸ்டார்க் 23 ரன்களும், பேட் கம்மின்ஸ் ஒரு ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக கிரிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளும், ஸ்டுவர்டு பிராட் 2 விக்கெட்டுகளும், மார்க் வுட் மற்றும் மொயின் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் எடுத்து இருந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பேட் கம்மின்ஸ் 1 ரன்னிலும், அவரைத்தொடர்ந்து ஹேசில்வுட் 4 ரன்களிலும் விரைவில் ஆட்டம் இழந்தனர். முடிவில் ஆஸ்திரேலிய அணி 90.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 317 ரன்கள் எடுத்து உள்ளது. மிட்செல் ஸ்டார்க் 36 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் கிரிஸ் வோக்ஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 10 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது.