ஆஷஸ் 3-வது டெஸ்ட்: மிட்செல் மார்ஷ் சதம்..! ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
|இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 5 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பிராட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஹெட்டிங்லே,
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் உள்ள ஹெட்டிங்லேயில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், கவாஜா களமிறங்கினர். டேவிட் வார்னர் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். கவாஜா 13 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த லபுசென் 21 ரன்னிலும், ஸ்மித் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்தது. 5வது விக்கெட்டுக்கு இணைந்த டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் ஜோடி நிதானமாக ஆடி 155 ரன்களை சேர்த்தது. மார்ஷ் சதமடித்தார். தேநீர் இடைவேளைக்கு பிறகு மிட்செல் மார்ஷ் 118 ரன்னில் வெளியேறினார்.
அவரை தொடர்ந்து டிராவிஸ் ஹெட் 39 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். இறுதியில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 5 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பிராட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்குகிறது.