< Back
கிரிக்கெட்
ஆஷஸ் 3-வது டெஸ்ட்: முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 68/3

image courtesy: England Cricket twitter

கிரிக்கெட்

ஆஷஸ் 3-வது டெஸ்ட்: முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 68/3

தினத்தந்தி
|
7 July 2023 3:17 AM IST

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்துள்ளது.

ஹெட்டிங்லே,

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் உள்ள ஹெட்டிங்லேயில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், கவாஜா களமிறங்கினர். டேவிட் வார்னர் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். கவாஜா 13 ரன்னில் அவுட் ஆனார்.

அடுத்து வந்த லபுசென் 21 ரன்னிலும், ஸ்மித் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்தது. 5-வது விக்கெட்டுக்கு இணைந்த டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் ஜோடி நிதானமாக ஆடி 155 ரன்களை சேர்த்தது. மார்ஷ் சதமடித்தார். தேநீர் இடைவேளைக்கு பிறகு மிட்செல் மார்ஷ் 118 ரன்னில் வெளியேறினார்.

அவரை தொடர்ந்து டிராவிஸ் ஹெட் 39 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். இறுதியில், ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 5 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பிராட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக சாக் கிராலி, பென் டக்கெட் களமிறங்கினர். பென் டக்கெட் 2 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த ஹேரி புரூக்கும் 3 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். தொடர்ந்து ஜோ ரூட் களமிறங்கினார். சாக் கிராலி 33 ரன்னில் வார்னரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

19 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி 195 ரன்கள் பின்தங்கியுள்ளது. ஜோ ரூட் 19 ரன்னுடனும் ஜானி பேர்ஸ்டோவ் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்த நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்