பினிஷராக இந்த வீரர்...டி20 உலகக்கோப்பைக்கான பேட்ஸ்மேன்களை தேர்வு செய்த இந்திய முன்னாள் வீரர்
|வரும் ஜூன் மாதம் 1ம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் 20 ஓவர் உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது.
புதுடெல்லி,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் சீசன் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் ஜூன் 1ம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் 20 ஓவர் உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்கின்றன.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க அனைத்து வீரர்களும் ஐ.பி.எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். இந்நிலையில் நடப்பு ஐ.பி.எல் தொடர் மட்டுமின்றி கடந்த இரண்டு சீசன்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷிவம் துபேவை டி20 உலகக்கோப்பைக்கான அணியில் சேர்க்க வேண்டும் என பல இந்திய முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் பினிஷராக செயல்படுவதற்கு ரிங்கு சிங் தயாராக உள்ளார். மேலும் விராட் கோலி, ரோகித் சர்மாவுடன் மிடில் ஆர்டரில் ஆட சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர். எனவே டி20 உலகக்கோப்பைக்கான பேட்ஸ்மேன்களாக இவர்கள் இருக்கதான் அதிக வாய்ப்பு உள்ளதாக இந்திய முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஷிவம் துபேவிடம் ஸ்ட்ரைக் செய்யும் திறமை இருக்கிறது. சூர்யகுமார் யாதவ் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார். ரிங்கு சிங்கிடம் அற்புதமான பினிஷிங் செய்யும் திறமை இருக்கிறது.
எனவே 2024 டி20 உலகக் கோப்பையில் இந்த 3 வீரர்களுடன் எஞ்சிய 11 வீரர்களை இந்தியா கண்டறிவது சிறப்பானதாக இருக்கும். விராட் மற்றும் ரோகித்துடன் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்கான இடம் மட்டுமே இருக்கிறது. அது எப்படி செல்லும் என்பதை பார்ப்பது சுவாரசியமானதாக இருக்கும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.