அருண் கார்த்திக் அபார சதம்... சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி நெல்லை வெற்றி.!
|நெல்லை அணியின் கேப்டன் அருண் கார்த்திக் அதிரடியாக விளையாடி சதமடித்தார்.
சேலம்,
8 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் அடுத்தக்கட்ட ஆட்டங்கள் சேலம் வாழப்பாடியில் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கிய 13-வது லீக்கில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, நெல்லை ராயல் கிங்சுடன் மோதியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி, அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரதோஷ் பால் 2 ரன்களும், ஜெகதீசன் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்துவந்த பாபா அபராஜித், சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். அவர் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹரிஷ் குமார் 20 ரன்களும், சாய்தேவ் 13 ரன்களும் எடுத்தனர்.
இறுதியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது. நெல்லை தரப்பில் பொய்யாமொழி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனை தொடர்ந்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை ராயல் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் அருண் கார்த்திக்கும், சாய் நிரஞ்சனும் களமிறங்கினர்.
சாய் நிரஞ்சன் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய கேப்டன் அருண் கார்த்திக், பந்துகளை நாலாபுறமும் பவுண்டரிக்கு விளாசினார். அவர் 61 பந்துகளில் 10 பவுண்டரி, 5 சிக்டருடன் சதமடித்து அசத்தினார். அத்துடன், அணியை வெற்றிபெறச்செய்தார். அவருடன் இணைந்து விளையாடிய ஈஸ்வரன் 26 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 18.5 ஓவர்களில் இலக்கை கடந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கேப்டன் அருண் கார்த்திக் 104 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் நெல்லை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.