அர்ஜுனா ரணதுங்கா தலைமையில் அமைக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வாரிய இடைக்கால குழு செயல்பட தடை!
|உலகக்கோப்பையில் தொடர் தோல்வி எதிரொலியாக கிரிக்கெட் வாரியத்தை கலைத்து இலங்கை விளையாட்டு துறை மந்திரி ரோஷன் ரணசிங்கே உத்தரவிட்டிருந்தார்.
கொழும்பு,
13-வது உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் பங்கேற்றுள்ள இலங்கை அணி 8 ஆட்டங்களில் விளையாடி 6 தோல்வி மற்றும் 2 வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை இழந்தது. மேலும் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 55 ரன்களில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது. இதனால் இலங்கை அணிக்கு எதிராக அந்நாட்டு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் உலகக்கோப்பையில் தொடர் தோல்வி எதிரொலியாக கிரிக்கெட் வாரியத்தை கலைத்து இலங்கை விளையாட்டு துறை மந்திரி ரோஷன் ரணசிங்கே உத்தரவிட்டார். மேலும் அர்ஜுனா ரணதுங்கா தலைமையில் புதிய இடைக்கால குழுவை அமைத்து உத்தரவிட்டார். அந்த குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதி உட்பட 7 பேர் இடம்பெற்றிருந்தனர்.
விளையாட்டு துறை மந்திரி ரோஷன் ரணசிங்கேவின் இந்த உத்தரவை எதிர்த்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் அப்போதைய தலைவர் ஷம்மி சில்வா நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் அர்ஜுனா ரணதுங்கா தலைமையில் அமைக்கப்பட்ட புதிய இடைக்கால குழு செயல்பட தடை விதித்துள்ளது. மேலும் ஷம்மி சில்வாவிற்கு கால அவகாசம் வழங்கியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து தலைவராக பதவியேற்ற 24 மணி நேரத்திலேயே தடை விழுந்ததால் கிரிக்கெட் வாரிய அலுவலகத்தில் இருந்து ரணதுங்கா வெளியேறினார்.