< Back
கிரிக்கெட்
ஐபிஎல்லில் முதல் முறையாக களம் இறங்கிய அர்ஜூன் டெண்டுல்கர்...ஷாரூக் கான் வெளியிட்ட பதிவு...!
கிரிக்கெட்

ஐபிஎல்லில் முதல் முறையாக களம் இறங்கிய அர்ஜூன் டெண்டுல்கர்...ஷாரூக் கான் வெளியிட்ட பதிவு...!

தினத்தந்தி
|
17 April 2023 6:30 PM IST

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதி துவங்கி தற்போது தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மும்பை,

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதி துவங்கி தற்போது தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த முறை உள்ளூர், வெளியூர் அடிப்படையில் போட்டிகள் நடைபெற்று வருவதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த முறை சென்ற ஆண்டு போல் இல்லாமல் எல்லா அணிகளுமே மாறி மாறி வெற்றிகளை பெற்று வருவதோடு, முதல் நான்கு இடத்தை பிடிப்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது.

அந்த வகையில், நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி வெங்கடேஷ் அய்யரின் சதத்தின் மூலம் 185 ரன்களை குவித்தது. இதையடுத்து ஆடிய மும்பை அணி 17.4 ஓவர்களில் 186 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் மும்பை அணிக்காக களம் இறங்கினார். ஐபிஎல் தொடரில் முதல்முறையாக சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகமாகி விளையாடிய முதல் போட்டி இதுதான். 23 வயதாகும் அர்ஜுன் டெண்டுல்கரை கடந்த 2021-ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்திலேயே மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கி இருந்த போதிலும், நேற்றைய போட்டியில் தான் முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் களம் இறக்கப்பட்டார்.

இந்நிலையில், அர்ஜூன் டெண்டுல்கர் மும்பை அணிக்காக களம் இறங்கியதற்கு கொல்கத்தா அணியின் இணை உரிமையாளரும், நடிகருமான ஷாரூக் கான் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக நடிகர் ஷாரூக் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

இந்த ஐபிஎல் விளையாட்டு எவ்வளவு போட்டியானதாக இருந்தாலும்... என் நண்பரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் களத்தில் இறங்குவதைப் பார்க்கும்போது, அது மகிழ்ச்சியை தருகிறது. அர்ஜூனுக்கும், சச்சின் டெண்டுல்கருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் அர்ஜூன், என்ன ஒரு பெருமையான தருணம் சச்சின் டெண்டுல்கர்...!

இவ்வாறு அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்