கிரிக்கெட் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தியிடம் காதலை வெளிப்படுத்திய புகைப்படங்களை பகிர்ந்த அர்ஜுன்
|கிரிக்கெட் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி சக வீரர் அர்ஜுன் ஹொய்சாலாவை கரம் பிடிக்கிறார்.
பெங்களூரு,
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம் பெற்று சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி. கர்நாடகாவை சேர்ந்த இவர், கொரோனா காலத்தில் தனது சகோதரி மற்றும் தாயார் என இருவரையும் அடுத்தடுத்து இழந்து சோகத்திற்கு ஆளானவர்.
இதனால், தொடர்ந்து போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் அவர், தனது நண்பரான கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரரான அர்ஜுன் ஹொய்சாலாவை திருமணம் செய்ய உள்ளார்.
இதுபற்றி, அர்ஜுன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றில், வேதா கிருஷ்ணமூர்த்தியின் முன் மண்டியிட்டு தனது காதலை வெளிப்படுத்துகிறார். பின்னர் அவருக்கு மோதிரம் அணிவிக்கிறார்.
இந்த புகைப்படங்களை வெளியிட்டு, தனது காதலை அவர் ஏற்று கொண்டார் என அர்ஜுன் தெரிவித்து உள்ளார். இதனையடுத்து அந்த பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. புது ஜோடிக்கு ரசிகர்கள் மற்றும் சக வீரர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
வேதா கிருஷ்ணமூர்த்தி இதுவரை 48 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி 829 ரன்களை குவித்து உள்ளார். அவற்றில் 8 அரை சதங்களும் அடங்கும். இதுதவிர, 76 சர்வதேச இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 875 ரன்களை எடுத்துள்ளார்.
இதேபோன்று, அர்ஜூன் கர்நாடக ரஞ்சி அணியில் விளையாடி உள்ளதுடன், கர்நாடக பிரீமியர் லீக்கின் 10 போட்டிகளில் விளையாடி உள்ளார்.