ஆஸ்திரேலிய வீரர்களுடன் வாக்குவாதம்; எம்.சி.சி. உறுப்பினர்கள் இடைநீக்கம்
|பேர்ஸ்டோ விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எம்.சி.சி. கிளப் உறுப்பினர்கள் 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
லண்டன்,
லண்டன் லார்ட்சில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் 2-வது டெஸ்டில் 371 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 327 ரன்னில் ஆல்-அவுட்டாகி 43 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 9 பவுண்டரி, 9 சிக்சருடன் 155 ரன்கள் விளாசியும் பலன் இல்லை. கடைசி நாளில் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவின் (10 ரன்) அவுட் சர்ச்சைக்குள்ளானது.
அவர் கேமரூன் கிரீன் வீசிய 'ஷாட்பிட்ச்' பந்தை குனிந்து தவிர்த்து விட்டு, எதிர்முனையில் நின்ற பேட்ஸ்மேனுடன் பேசும் தொனியில் கிரீசை விட்டு வெளியேறி சில அடி முன்னேறினார். அதற்குள் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி பந்தை பிடித்து ஸ்டம்பு மீது எறிந்து அவுட் கேட்டு அப்பீல் செய்தார். 3-வது நடுவர் இது ஸ்டம்பிங் என்று தீர்ப்பளித்தார். ஓவர் முடிவதற்குள் இவ்வாறு நகர்ந்ததால் விதிமுறைப்படி இது அவுட் தான். ஆனால் விளையாட்டின் உண்மையான உத்வேகத்துக்கு பொருத்தமற்ற செயல் என்று விமர்சனங்கள் எழுந்தன. இதனால் கோபமடைந்த இங்கிலாந்து ரசிகர்கள், ஆஸ்திரேலிய வீரர்களுக்கு எதிராக கோஷமிட்டனர்.
மதிய உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய வீரர்கள் ஓய்வறைக்கு திரும்பும் போது, மெரில்போன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.) உறுப்பினர்களுக்கான நீண்ட அறையை கடந்து தான் செல்ல வேண்டும். ஆஸ்திரேலிய வீரர்கள் அந்த இடத்திற்கு வந்த போது பேர்ஸ்டோவின் சர்ச்சை அவுட்டால் அதிருப்திக்குள்ளாகி இருந்த சில உறுப்பினர்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னரை வம்புக்கு இழுத்தனர். அவர்களும் பதிலுக்கு ஏதோ வசைபாடியபடி சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய அணி நிர்வாகம், எம்.சி.சி. கிளப்பிடம் புகார் செய்தது. இது குறித்து ஆஸ்திரேலிய வீரர் கவாஜா கூறுகையில், 'எனக்கு மிகவும் பிடித்தமான இடங்களில் லண்டன் லார்ட்சும் ஒன்று என்று நான் எப்போதும் சொல்வேன். ஆனால் இன்றைய நாள் லார்ட்சில் சில எம்.சி.சி. உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதம் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. அவர்கள் தாறுமாறான குற்றச்சாட்டுகளை எங்கள் மீது சுமத்தினர். அதற்கு நானும் பதில் சொல்ல வேண்டியதாகி விட்டது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இது அவமரியாதைக்குரிய செயல்' என்று கண்டித்தார்.
நடந்த சம்பவத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய எம்.சி.சி. ஆஸ்திரேலிய வீரர்களை சீண்டிய 3 உறுப்பினர்களை அடையாளம் கண்டு அவர்களை கிளப்பில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது. அவர்கள் மீண்டும் லார்ட்ஸ் ஸ்டேடியத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள். அதே சமயம் இது குறித்து விசாரணை நடைபெறும் என்று எம்.சி.சி. கூறியுள்ளது.