நீங்கள்தான் அடுத்த தலைமை பயிற்சியாளரா? - கம்பீர் அளித்த பதில்
|இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கொல்கத்தா,
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ளது. மேற்கொண்டு அவர் இந்த பதவியில் தொடர ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதற்கான வேலையை பி.சி.சி.ஐ. தொடங்கியது.
இதற்காக பி.சி.சி.ஐ. கவுதம் கம்பீர், விவிஎஸ் லக்ஷ்மன், ஆசிஸ் நெஹ்ரா போன்ற இந்திய முன்னாள் வீரர்களை அணுகியதாக செய்திகள் வெளியானது. இதில் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளருக்கான வாய்ப்பில் முன்னணியில் உள்ள இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் நீங்கள் தான் அடுத்த பயிற்சியாளரா? என்று கேட்ட போது,
'நான் அதை பற்றி பெரிய அளவில் யோசிக்கவில்லை. நீங்கள் என்னிடம் கடினமான கேள்விகளை கேட்கிறீர்கள். இதற்கு பதில் அளிப்பது கடினம். இங்கு நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று மட்டுமே உங்களிடம் சொல்ல முடியும். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பை வென்ற இந்த அற்புதமான பயணத்தை முடித்துவிட்டு அதை அனுபவித்து வருகிறேன்' என்றார்.