< Back
கிரிக்கெட்
அந்த 2 வீரர்களை தவிர்த்து மற்றவர்களை மும்பை கழற்றி விட வேண்டும் - சேவாக் அதிரடி கருத்து
கிரிக்கெட்

அந்த 2 வீரர்களை தவிர்த்து மற்றவர்களை மும்பை கழற்றி விட வேண்டும் - சேவாக் அதிரடி கருத்து

தினத்தந்தி
|
17 May 2024 9:25 AM GMT

நடப்பு ஐ.பி.எல். சீசனில் மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் முதல் அணியாக வெளியேறியது.

மும்பை,

இந்தியாவில் நடைபெற்று வரும் 17-வது ஐ.பி.எல். தொடரில் 5 முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி முதல் அணியாக லீக் சுற்றுடன் வெளியேறியது. முன்னதாக இந்த வருடம் வருங்காலத்தை கருத்தில் கொண்டு ரோகித் சர்மாவுக்கு பதிலாக மும்பை அணி ஹர்திக் பாண்ட்யாவை தங்களுடைய கேப்டனாக நியமித்தது. அதற்கு மும்பை ரசிகர்களே கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த தோல்விக்கு புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ஹர்திக் பாண்ட்யா முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். ஏனெனில் பேட்டிங், பவுலிங் ஆகிய எதிலுமே தாக்கத்தை ஏற்படுத்தாத அவர் கேப்டனாகவும் முக்கிய முடிவுகள் எடுப்பதில் சொதப்பினார். அதேபோல ரோகித் சர்மாவும் ஒரு சதத்தை தவிர்த்து எஞ்சிய போட்டிகளில் சுமாராகவே செயல்பட்டார். மேலும் பந்து வீச்சில் வழக்கம் போல பும்ராவை தவிர்த்து மற்ற மும்பை பவுலர்கள் சுமாராக விளையாடியது தோல்வியை கொடுத்தது.

இந்நிலையில் பாலிவுட் நட்சத்திரங்களான அமீர் கான், சல்மான் கான் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் ஒன்றாக நடித்தால் மட்டும் அந்த படம் ஓடாது என்று வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். எனவே சூர்யகுமார் யாதவ் மற்றும் பும்ரா ஆகியோரை தவிர்த்து அடுத்த வருடம் நடைபெற உள்ள மெகா ஏலத்தில் மற்ற அனைத்து வீரர்களையும் மும்பை கழற்றி விட வேண்டும் என்று அவர் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.

அப்போதுதான் மும்பை வெற்றி பாதைக்கு திரும்ப முடியும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு:- "ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான் ஆகியோர் ஒரு படத்தில் இருந்தால் அது வெற்றி பெறுமா என்பதை என்னிடம் சொல்லுங்கள்? கண்டிப்பாக கிடையாது. நீங்கள் அதற்கு நன்றாக செயல்பட வேண்டும். உங்களுக்கு நல்ல கதை வேண்டும். அதேபோல நட்சத்திர வீரர்கள் ஒன்றாக சேர்ந்தால் மட்டும் போதாது. நன்றாக செயல்பட வேண்டும்.

ரோகித் சர்மா ஒரு சதமடித்தார் மும்பை தோற்றது. மற்ற போட்டிகளில் அவருடைய செயல்பாடுகள் எங்கே? இஷான் கிஷன் மொத்த ஐ.பி.எல். தொடரில் விளையாடியும் பவர் பிளே ஓவர்களை தாண்டவில்லை. தற்போதைய நிலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் மட்டுமே முக்கியமானவர்களாக இருக்கின்றனர். எனவே அவர்களை தவிர்த்து அடுத்த வருடம் நடைபெற உள்ள மெகா ஏலத்தில் மற்ற அனைத்து வீரர்களையும் மும்பை கழற்றி விட வேண்டும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்