< Back
கிரிக்கெட்
டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த அஸ்வினை பாராட்டிய அனில் கும்ப்ளே, டிராவிட்
கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த அஸ்வினை பாராட்டிய அனில் கும்ப்ளே, டிராவிட்

தினத்தந்தி
|
17 March 2024 11:52 AM IST

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் மற்றும் 100 போட்டிகளில் விளையாடி சாதனை படைத்த அஸ்வினை அனில் கும்ப்ளே மற்றும் டிராவிட் பாராட்டியுள்ளனர்.

சென்னை,

இங்கிலாந்து அணிக்கு எதிராக நிறைவு பெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4 - 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. அதில் தர்மசாலாவில் நடந்த கடைசி போட்டியில் இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 14வது வீரர் என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்தார். அப்போட்டியில் 128 ரன்கள் கொடுத்து 9 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

அதன் வாயிலாக உலகிலேயே தனது 100வது டெஸ்ட் போட்டியில் சிறந்த பவுலிங்கை பதிவு செய்த வீரர் என்ற முத்தையா முரளிதரனின் சாதனையை உடைத்து அஸ்வின் புதிய சாதனை படைத்தார். அத்துடன் உலகிலேயே தன்னுடைய அறிமுகப் போட்டியிலும் 100வது போட்டியிலும் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.

இந்நிலையில் இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் தமிழக வீரராக சாதனை படைத்த அஸ்வினுக்கு நேற்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது.

அதில் ராகுல் டிராவிட் கலந்து கொண்டு பேசியது பின்வருமாறு:-

"அஸ்வின் இன்னும் கெரியரை முடிக்கவில்லை என்று நம்புகிறேன். அவர் தனது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் புதுமையின் வாயிலாக சுழல் பந்து வீச்சில் நகர்வை ஏற்படுத்தியுள்ளார். சிறப்பாக செயல்பட்டு அவர் இளம் தலைமுறை ஸ்பின்னர்களை ஊக்கப்படுத்தியுள்ளார். அவர் எப்போதுமே அணியின் வெற்றிக்காக பங்காற்றுவதற்கு ஆர்வத்துடன் இருப்பவர். அவருடன் என்னுடைய நேரத்தை மிகவும் ரசித்தேன். அவரைப் பற்றிய நல்ல விஷயம் என்னவெனில் அவர் உங்களுக்கு சவால் விடுகிறார். ஒரு பயிற்சியாளராக நீங்கள் அதை விரும்புகிறீர்கள் அவருடன் இன்னும் இது போன்ற நினைவுகளை எதிர்பார்க்கிறேன்" என்றுபாராட்டி பேசினார்.

அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற அனில் கும்ப்ளே பேசியது பின்வருமாறு:-

"என்னுடைய புத்தகத்தில் அஸ்வின் நம்முடைய நாட்டுக்காக விளையாடிய சிறந்த வீரர்களில் ஒருவர். அவருடைய புள்ளிவிவரங்கள் சிறப்பாக உள்ளன. அவருக்கும் இந்தியாவின் வெற்றிக்கும் அபரீதமான தொடர்பு உள்ளது. அவர் ஒரு போதும் திருப்தியடைவதில்லை. எப்போதும் அதிகமாக அசத்துவதற்கு விரும்புகிறார். அவர் 100-வது போட்டியை முன்கூட்டியே விளையாடியிருக்க வேண்டும். இருப்பினும் இந்தியா வெளிநாட்டுக்கு செல்லும் போதெல்லாம் அவர் தேர்வு செய்யப்படுவதில்லை. அது இப்போதும் எனக்கு குழப்பமாக இருக்கிறது" என்று பாராட்டினார்.

மேலும் செய்திகள்