ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளராக ஆண்டி ப்ளவர் நியமனம்...!
|ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளராக ஆண்டி ப்ளவரை நியமித்து அணி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பெங்களூரு,
ஐபிஎல் தொடரில் நட்சத்திர அணியாக வலம் வருகிறது பெங்களூரு அணி. ஐபிஎல் தொடர் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது. இந்த அணியின் பயிற்சியாளராக கடந்த 2019ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தவர் மைக் ஹெசன். இவரது தலைமையின் கீழ் ஆர்சிபி அணி தொடர்ச்சியாக 3 முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது .
ஆனால் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியால் பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேற முடியவில்லை. கடந்த முறை மிகச்சரியான கலவையில் அமைந்த அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாததால் அந்த அணி ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
16 ஆண்டுகளாக ஒரு கோப்பையை கூட வெல்ல முடியாதது, அந்த அணி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆர்சிபி பயிற்சியாளர் மைக் ஹெசன் நீக்கப்படுவதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்தது. இவரின் ஒப்பந்தம் இந்த மாத இறுதியுடன் முடிவடைவதால், அதன்பின் புதிய பயிற்சியாளரை நியமிக்க ஆர்சிபி நிர்வாகம் பரிசீலித்து வந்தது.
இந்த நிலையில் ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளராக ஆண்டி ப்ளவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஆர்சிபி அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளது. இவருடன் மூன்று ஆண்டுகள் வரை ஆர்சிபி அணி ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.