< Back
கிரிக்கெட்
சர்பராஸ் கானின் தந்தைக்கு தார் பரிசு... சர்ப்ரைஸ் கொடுத்த ஆனந்த் மஹிந்திரா
கிரிக்கெட்

சர்பராஸ் கானின் தந்தைக்கு 'தார்' பரிசு... சர்ப்ரைஸ் கொடுத்த ஆனந்த் மஹிந்திரா

தினத்தந்தி
|
16 Feb 2024 12:43 PM GMT

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய சர்பராஸ் கான் அதிரடியாக விளையாடி 62 ரன்கள் குவித்தார்.

புதுடெல்லி,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோகித், ஜடேஜாவின் அபார சதம் மற்றும் அறிமுக வீரர் சர்பராஸ் கானின் அரை சதத்தின் உதவியுடன் முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தது. பின்னர் இங்கிலாந்து அணி, தனது முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது.

முன்னதாக இப்போட்டியில் அறிமுகமான சர்பராஸ் கான், ரோகித் சர்மா அவுட்டானதும் களமிறங்கி அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டார். வெறும் 48 பந்துகளில் சதமடித்த அவர் 9 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் 62 (66 பந்துகள் ) ரன்கள் எடுத்து நன்கு செட்டிலானார். ஆனால் ரவீந்திர ஜடேஜாவின் தவறான அழைப்பால் ரன் அவுட் ஆனார்.

இந்நிலையில் அறிமுக போட்டியிலேயே 62 ரன்கள் விளாசிய சர்பராஸ் கானை பாராட்டும் வகையில், அவரது தந்தைக்கு 'தார்' காரை பரிசாக வழங்குவதாக மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார்.

இது குறித்து ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோவுடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

"தைரியத்தை இழந்துவிட வேண்டாம். கடின உழைப்பு. தைரியம். பொறுமை. ஒரு தந்தையின் குணங்களை விட, ஒரு குழந்தைக்கு ஊக்கமளிக்க சிறந்த குணங்கள் என்ன உள்ளது? தன் குழந்தைக்கு உத்வேகம் தரும் பெற்றோராக இருப்பதற்காக, சர்பராஸின் தந்தை நவுஷத் கான் ஏற்றுக்கொண்டால் அவருக்கு தார் காரை பரிசாக அளிப்பது எனது பாக்கியம் மற்றும் கவுரவம்." என பகிர்ந்துள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆனந்த் மஹிந்திரா ஏற்கனவே பல கிரிக்கெட் வீரர்களுக்கு கார்களை பரிசாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்