< Back
கிரிக்கெட்
சென்னை அசத்தல் பந்து வீச்சு: பஞ்சாப்பை வீழ்த்தி அபார வெற்றி
கிரிக்கெட்

சென்னை அசத்தல் பந்து வீச்சு: பஞ்சாப்பை வீழ்த்தி அபார வெற்றி

தினத்தந்தி
|
5 May 2024 7:10 PM IST

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தர்மசாலா,

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கர்ரண் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 43 ரன்கள் அடித்தார். பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ராகுல் சஹார், ஹர்ஷல் படேல் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி சென்னை பந்து வீச்சாளர்களின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணி வீரர்கள் பேர்ஸ்டோ 7 ரன்களிலும், ரோசோவ் டக் அவுட் ஆகியும் ஏமாற்றம் அளித்தனர். இருவரின் விக்கெட்டுகளையும் துஷார் தேஷ்பாண்டே ஒரே ஓவரில் வீழ்த்தினார். சிறிது நேரம் நிலைத்து நின்ற தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் 30 ரன்களிலும், ஷாசாங்க் சிங் 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கிய சாம் கர்ரண் 7 ரன்களிலும், ஜிதேஷ் சர்மா ரன் எதுவுமின்றியும், அசுதோஷ் சர்மா 3 ரன்களிலும், ஹர்ஷல் படேல் 12 ரன்களிலும் சென்னை அணியின் பந்து வீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

முடிவில் பஞ்சாப் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் சென்னை 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

அந்த அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 30 ரன்கள் அடித்தார். சென்னை தரப்பில் அபாரமாக பந்து வீசிய ஜடேஜா 3 விக்கெட்டுகளும், தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங் தலா 2 விக்கெட்டுகளும், வீழ்த்தி அசத்தினர்.

மேலும் செய்திகள்