< Back
கிரிக்கெட்
மன்கட் ரன்-அவுட்டுக்கு பதிலாக மாற்று வழி - இந்திய அணியின் முன்னாள் கேப்டன்

கோப்புப்படம் 

கிரிக்கெட்

'மன்கட்' ரன்-அவுட்டுக்கு பதிலாக மாற்று வழி - இந்திய அணியின் முன்னாள் கேப்டன்

தினத்தந்தி
|
27 Sept 2022 7:44 AM IST

‘மன்கட்’ ரன்-அவுட்டுக்கு பதிலாக மாற்று வழி ஒன்றை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார்.


லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த சனிக்கிழமை நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. கடைசி 40 பந்துகளில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் அணியை கரைசேர்க்க போராடிய இங்கிலாந்து வீராங்கனை சார்லி டீன் (47 ரன்கள்) ரன்-அவுட் செய்யப்பட்டார்.

அதாவது சுழற்பந்து வீச்சாளர் தீப்தி ஷர்மா பந்தை வீசுவதற்கு முன்பே பவுலிங் முனையில் நின்ற சார்லி டீன் கிரீசை விட்டு சில அடிகள் முன்னோக்கி நகர்ந்தார். இதனை கவனித்த தீப்தி ஷர்மா பந்தை வீசாமல் ஸ்டம்பை பந்தால் அடித்து சார்லி டீனை ரன்-அவுட் செய்து இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.

சர்ச்சைக்குரிய 'மன்கட்' முறையில் தீப்தி ஷர்மா ரன்-அவுட் செய்தது விமர்சனத்துக்கு உள்ளானது. இங்கிலாந்து வீரர்கள் பலர் இந்த ரன்-அவுட் விளையாட்டு உத்வேகத்துக்கு எதிரானது என்று கருத்து தெரிவித்தனர். அதேநேரத்தில் அஸ்வின் உள்ளிட்ட இந்திய வீரர்கள் தீப்தி ஷர்மா செய்தது விளையாட்டு விதிமுறைப்படி சரியானதாகும் என்று ஆதரவு தெரிவித்தனர்.

இதற்கிடையே, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் 'மன்கட்' ரன்-அவுட் சலசலப்புக்கு புதிய யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில்,

'இதுபோன்ற சர்ச்சை எழும்போது அதுபற்றி காரசாரமாக விவாதிப்பதற்கு பதிலாக எளிமையான விதிமுறையை கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறேன். என்னை பொறுத்தவரையில் பவுலிங் முனையில் இருக்கும் பேட்டர், பந்து வீசும் முன்பே கிரீசுக்கு வெளியே சென்றால் அதனை 'ஷாட் ரன்' என்று கூறி ஒரு ரன்னை குறைக்க வேண்டும். இது தான் சரியான தீர்வாகும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்