மொத்த இந்தியாவும் காத்திருக்கு ...தோனி உதவி இல்லாமல் கெய்க்வாட் சாதிப்பாரா? - ராயுடு
|சென்னை - பெங்களூரு இடையேயான போட்டியை காண மொத்த இந்தியாவும் காத்திருப்பதாக அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.
மும்பை,
கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கிய 17-வது ஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் 6 லீக் போட்டிகளே எஞ்சியுள்ள நிலையில், கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகளே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 2 இடங்களுக்கு சென்னை, ஐதராபாத், டெல்லி, லக்னோ மற்றும் பெங்களூரு ஆகிய 5 அணிகளுக்கிடையே போட்டி காணப்படுகின்றது.
அதில் லக்னோ மற்றும் டெல்லி அணிகளுக்கு வாய்ப்பு குறைவு. மற்ற 3 அணிகளில் ஐதராபாத்துக்கு இன்னும் 2 லீக் ஆட்டங்கள் உள்ளதால் அந்த அணி தகுதி பெற்றுவிடும். மீதமுள்ள ஒரு இடத்திற்கு சென்னை - பெங்களூரு இடையே போட்டி காணப்படுகிறது. அந்த சூழலில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டி வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது. நாக் அவுட் போன்ற அந்தப் போட்டிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் இப்போட்டியை காண மொத்த இந்தியாவும் காத்திருப்பதாக அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். மேலும் கடந்த காலங்களில் இது போன்ற போட்டிகளில் தோனி தலைமையில் சென்னை வெற்றி பெற்றுள்ளதாக ராயுடு கூறியுள்ளார். ஆனால் இம்முறை தோனியின் உதவி இல்லாமல் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அழுத்தத்தை சமாளித்து சாதிப்பாரா? என்பதை பார்க்க உள்ளதாக ராயுடு கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-
"மே 18-ம் தேதிக்காக நாட்டில் உள்ள அனைவரும் காத்திருக்கின்றனர். நானும் அதில் வித்தியாசமானவன் கிடையாது. அப்போட்டியில் புதிய கேப்டன் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் எதிரணிக்கு சவால் கொடுப்பதை நான் பார்க்க விரும்புகிறேன். இது போன்ற நெருக்கமான போட்டிகளில் எம்.எஸ். தோனி தலைமையில் சென்னை அணி நன்றாக செயல்பட்டுள்ளது. இம்முறை அது போன்ற நெருக்கடியான சூழ்நிலையில் தோனியின் உதவி இல்லாமல் ருதுராஜ் எப்படி அணியை வழி நடத்துகிறார் என்பதை பார்க்க சுவாரசியமாக இருக்கும். அதேபோல பெங்களூரு அணியும் வெற்றி காண்பதற்கு வலுவாக வருவார்கள். எனவே இப்போட்டி மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும்" என்று கூறினார்.