அக்சர் போராட்டம் வீண்... டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி
|ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.
பெங்களூரு,
அனல் பறக்க நடந்து வரும் 17-வது ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணியின் பொறுப்பு கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூ அனி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரஜத் படிதார் 52 ரன்கள் அடித்தார். டெல்லி தரப்பில் அதிகபட்சமாக கலீல் அகமது மற்றும் ரசிக் சலாம் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 188 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணி ஆரம்பம் முதலே பெங்களுரு பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன டேவிட் வார்னர் 1 ரன்னிலும், அவரை தொடர்ந்து அபிஷேக் போரல் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சிறிது நேரம் அதிரடி காட்டிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜேக் பிரேசர் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.
பின்னர் களமிறங்கிய வீரர்களில் ஷாய் ஹோப் 29 ரன்களிலும், குமார் குஷ்காரா 2 ரன்களிலும், ஸ்டப்ஸ் 3 ரன்களிலும், ரசிக் சலாம் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் அக்சர் படேல் தனி ஆளாக போராடினார். அரை சதம் அடித்த அவர் 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.
முடிவில் டெல்லி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி பிளே ஆப் வாய்ப்பில் இன்னும் நீடிக்கிறது.
டெல்லி தரப்பில் அதிகபட்சமாக அக்சர் படேல் 57 ரன்கள் அடித்தார். பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக யாஷ் தயாள் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.