இந்திய அணியில் இடம் பிடிக்க முகமது ஷமிதான் காரணம் - ஆகாஷ் தீப்
|வங்காளதேசத்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் ஆகாஷ் தீப் இடம்பெற்றுள்ளார்.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக வங்காளதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் ஆகாஷ் தீப் இடம்பெற்றுள்ளார்.
இளம் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் கடந்த ஏப்ரல் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். அந்த அறிமுக போட்டியிலேயே நன்றாக பந்து வீசிய அவர் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
அதைத் தொடர்ந்து 2024 துலீப் கோப்பையில் இந்தியா ஏ அணிக்காக விளையாடிய அவர் பி அணிக்கு எதிரான முதல் ரவுண்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனால் அடுத்ததாக வங்காளதேச தொடரில் அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக எப்படி வெற்றிகரமாக பந்து வீச வேண்டும் என்ற ஆலோசனையை முகமது ஷமி தமக்கு கூறியதாக ஆகாஷ் தீப் தெரிவித்துள்ளார். அதைப் பயன்படுத்தி இந்திய அணியில் அசத்தியது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-
"முகமது ஷமியிடம் பந்தை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக எப்படி திருப்புவது என்பது பற்றி பேசினேன். அவர் அதை செய்வதை நான் பார்த்துள்ளேன். பொதுவாக இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அரவுண்ட் விக்கெட் திசையிலிருந்து வீசும்போது பந்து இயற்கையாகவே பளபளப்பான பக்கத்தை நோக்கி நகரும். அந்த நிலையில் பந்தை உள்ளே கொண்டு வருவதில் அதிகமாக கவனம் செலுத்தாதீர்கள் என்று ஷமி என்னிடம் சொன்னார். தொடர்ச்சியாக சரியாக வீசினால் பந்து தாமாகவே உள்ளே வரும் அப்போது அது விக்கெட் எடுக்கும் பந்தாக மாறும் என்றும் ஷமி கூறினார்.
ஏனெனில் தொடர்ச்சியாக வெளியே செல்லும்போது பளபளப்பான பக்கத்தை பயன்படுத்தி உங்களால் பந்தை உள்ளே கொண்டு வர முடியும். அது பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருக்கும். எனவே அதிகமாக எதையும் முயற்சிக்காதீர்கள் என்று ஷமி சொன்னார். அதே சமயம் ஒரு பவுலராக நீங்கள் அதை செய்யும்போது பேட்ஸ்மேன்கள் பந்தை துரத்தி அவுட்டாக வாய்ப்புள்ளது" என்று கூறினார்.