< Back
கிரிக்கெட்
ரோகித் சர்மா, விராட் கோலிக்கு அடுத்து இவர்தான் இந்திய அணியின் அடுத்த தலைமுறை சூப்பர் ஸ்டார் – வாசிம் அக்ரம்
கிரிக்கெட்

ரோகித் சர்மா, விராட் கோலிக்கு அடுத்து இவர்தான் இந்திய அணியின் அடுத்த தலைமுறை சூப்பர் ஸ்டார் – வாசிம் அக்ரம்

தினத்தந்தி
|
19 Nov 2023 11:19 AM IST

உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோத உள்ளன.

அகமதாபாத்,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடர் இந்தியாவின் 10 நகரங்களில் நடந்தது. லீக் மற்றும் அரையிறுதி சுற்று முடிவில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.

இந்த நிலையில் கிரிக்கெட் உலகமே ஆவலோடு எதிர்நோக்கும் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பலப்பரீட்சையில் இறங்குகின்றன.

இந்த தொடர் முழுவதுமே ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட தோற்காமல் இறுதிப்போட்டி வரை முன்னேறியுள்ளது. இந்த தொடரில் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் அற்புதமான பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக சதம் விளாசிய விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் அதிக சதங்கள் சாதனையை ஒருநாள் கிரிக்கெட்டில் தகர்த்து புதிய மைல்கல்லை எட்டினார். அதேபோன்று ரோகித் சர்மாவும் இந்த தொடர் முழுவதுமே அதிரடியான துவக்கத்தை அளித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவி வருகிறார்.

இந்நிலையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு அடுத்து இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் சுப்மன் கில் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் ;- 'ரோகித் சர்மா இந்த உலகக்கோப்பை தொடரில் அளித்து வரும் துவக்கம் மிக அற்புதமாக உள்ளது. அவரது ஸ்ட்ரைக் ரேட் ஆட்டத்தின் முதல் ஓவரில் இருந்தே 150-யை தாண்டி இருப்பதினால் இந்திய அணி வெகுவிரைவாக பெரிய ரன்களை குவிக்க ஆரம்பிக்கிறது. அதேபோன்று விராட் கோலி மிடில் ஓவர்களில் நிலைத்து நிற்பதால் ரன் ரேட் நிலையாக செல்கிறது.

அவர்கள் இருவருக்கு அடுத்து இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டாராக நான் சுப்மன் கில்லை பார்க்கிறேன். ஏனெனில் அவர் ஒரு மிகச்சிறப்பான வீரர். தொடர்ச்சியாக ரன் குவிக்கும் அவர் பெரிய இன்னிங்சும் விளையாடும் அளவிற்கு திறன் உடையவர். எனவே இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலிக்கு அடுத்து நிச்சயம் சுப்மன் கில்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை' என்று கூறினார்.

மேலும் செய்திகள்