7 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி கோப்பை தொடரின் காலிறுதியில் தமிழ்நாடு அணி
|தமிழக அணி, தனது கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப்புடன் மோதியது.
சேலம்,
89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பவ்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் 'சி' பிரிவில் அங்கம் வகிக்கும் தமிழக அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப்புடன் மோதியது.
இதில் வெற்றி பெற்றால் காலிறுதிக்கு முன்னேறலாம் என்ற சூழ்நிலையில் தமிழகம் விளையாடியது. இந்த ஆட்டம் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த தமிழக அணி முதல் இன்னிங்சில் 435 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 187 ரன்கள் குவித்தார். இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பஞ்சாப், தமிழக அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 274 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக அன்மோல் மல்கோத்ரா 64 ரன்கள் அடித்தார். தமிழக அணி தரப்பில் அதிகபட்சமாக அஜித் ராம் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
பின்னர் 161 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய பஞ்சாப் 3-வது நாளில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் அடித்திருந்தது. நேஹால் வதேரா 103 ரன்களுடன் களத்தில் இருந்தார். தமிழகம் தரப்பில் அஜித் ராம் 3 விக்கெட்டுகளும், பிரதோஷ் ரஞ்சன் பால் 1 விக்கெட்டும் வீழ்த்தி இருந்தனர்.
இதனையடுத்து 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த பஞ்சாப் மேற்கொண்டு 51 ரன்கள் அடித்த நிலையில், எஞ்சிய 6 விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் தமிழக அணிக்கு 71 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தமிழக அணி தரப்பில் சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளும், அஜித் ராம் மற்றும் பிரதோஷ் ரஞ்சன் பால் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய தமிழ்நாடு 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 71 ரன்கள் அடித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தமிழகம் 7 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி கோப்பை தொடரின் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.