50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஆப்கானிஸ்தான் ருசித்த 2-வது வெற்றி..!
|உலகக் கோப்பையில் இதுவரை 18 ஆட்டங்களில் ஆடியுள்ள ஆப்கானிஸ்தான் அதில் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் நேற்று அரங்கேறிய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 13-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், ஆப்கானிஸ்தானும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 284 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.
அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 40.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்று பலம் வாய்ந்த இங்கிலாந்துக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.
சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்தை ஆப்கானிஸ்தான் அடக்குவது இதுவே முதல் நிகழ்வாகும். இதற்கு முன்பு அந்த அணியுடன் மோதிய இரு ஒரு நாள் போட்டிகளிலும், மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் தோற்று இருந்தது.
அதே சமயம் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஆப்கானிஸ்தான் ருசித்த 2-வது வெற்றி இதுவாகும். ஏற்கனவே 2015-ம் ஆண்டில் ஸ்காட்லாந்துக்கு எதிராக மட்டும் வெற்றி பெற்றிருந்தது. அதாவது உலகக் கோப்பையில் இதுவரை 18 ஆட்டங்களில் ஆடியுள்ள ஆப்கானிஸ்தான் அதில் 2-ல் வெற்றியும், 16-ல் தோல்வியும் சந்தித்துள்ளது.