அபிஷேக் சர்மா அதிரடி சதம்...இந்தியா 234 ரன்கள் குவிப்பு
|இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 100 ரன்கள் அடித்தார்.
ஹராரே,
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் 13 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி கண்டது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
இதில் சுப்மன் கில் 2 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து அபிஷேக் சர்மாவுடன் கெய்க்வாட் ஜோடி சேர்ந்தார். இதில் கெய்க்வாட் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுபுறம் அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். ஜிம்பாப்வேயின் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய அபிஷேக் சர்மா சதம் அடித்து அசத்தினார்.
சதம் அடித்து அசத்திய அபிஷேக் சர்மா 47 பந்தில் 100 ரன்களில் அவுட் ஆனார். இதையடுத்து ரிங்கு சிங் களம் இறங்கினார். மறுபுறம் நிதான ஆட்டத்தை வெளிபடுத்திய கெய்க்வாட் 38 பந்தில் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த பின் கெய்க்வாட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரிங்கு சிங்கும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 100 ரன்கள் அடித்தார். ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி, மசகட்சா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி ஆட உள்ளது.