அபிஷேக் அதிரடி..பஞ்சாபை வீழ்த்தி புள்ளி பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறிய ஐதராபாத்
|ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி பெற்றது.
ஐதராபாத்,
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 71 ரன்கள் அடித்தார். ஐதராபாத் அணி தரப்பில் அதிகபட்சமாக நடராஜன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரரான டிராவிஸ் ஹெட் இன்னிங்சின் முதல் பந்திலேயே போல்டானார். அவரை தொடர்ந்து அபிஷேக் சர்மாவுடன் திரிபாதி கை கோர்த்தார்.
இருவரும் ஆரம்பம் முதலே பஞ்சாப் அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். திரிபாதி தனது பங்குக்கு 18 பந்துகளில் 33 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன் பின் களமிறங்கிய நிதிஷ் ரெட்டி நிதானமாக விளையாடினார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 66 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். இவரின் அதிரடியால் ஐதராபாத் இலக்கை சிக்கலின்றி நெருங்கியது.
இறுதி கட்டத்தில் கிளாசென் அதிரடியாக விளையாடினார். ஆனால் மறுமுனையில் நிதிஷ் ரெட்டி, ஷபாஸ் அகமது அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் ஆட்டம் கடைசி ஓவர் வரை நகர்ந்தது. முடிவில் ஐதராபாத் 19.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் புள்ளி பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.