< Back
கிரிக்கெட்
இது போன்ற அணி எப்போதும் வெல்லப் போவதில்லை - ஆர்.சி.பி. குறித்து ராயுடு விமர்சனம்
கிரிக்கெட்

இது போன்ற அணி எப்போதும் வெல்லப் போவதில்லை - ஆர்.சி.பி. குறித்து ராயுடு விமர்சனம்

தினத்தந்தி
|
3 April 2024 7:00 PM IST

காலம் காலமாக அழுத்தமான சூழ்நிலைகளில் பெங்களூரு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டதில்லை என்று அம்பாத்தி ராயுடு கூறியுள்ளார்.

பெங்களூரு,

ஐ.பி.எல். அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நடப்பு சீசனை தடுமாற்றத்துடன் தொடங்கி உள்ளது. இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3 தோல்வி, ஒரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

குறிப்பாக இந்த சீசனில் பெரும்பாலான அணிகள் தங்களுடைய சொந்த மண்ணில் தொடர்ச்சியாக வெற்றி கண்டு வருகிறது. ஆனால் ஆர்.சி.பி. சொந்த மண்ணில் விளையாடிய கொல்கத்தா மற்றும் லக்னோவுக்கு எதிராக தோல்வியை பதிவு செய்துள்ளது.

இதில் நேற்று நடைபெற்ற லக்னோவுக்கு எதிரான போட்டியில் 182 ரன்களை இலக்காக கொண்டு சேசிங் செய்த பெங்களூருவுக்கு விராட் கோலி, கேப்டன் டு பிளிஸ்சிஸ், கேமரூன் க்ரீன், கிளன் மேக்ஸ்வெல் போன்ற நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தனர். இதனால் பெங்களூரு அந்த போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இந்தப் போட்டியை போலவே காலம் காலமாக அழுத்தமான சூழ்நிலைகளில் பெங்களூரு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டதில்லை என்று அம்பாத்தி ராயுடு கூறியுள்ளார். ஆனால் அதே நட்சத்திர வீரர்கள் அழுத்தமற்ற போட்டிகளில் பிஸ்கட்டில் உள்ள கிரீமை எளிதாக சாப்பிடுவதுபோல டாப் ஆர்டரில் அபாரமாக விளையாடி பெயர் வாங்குவதாகவும் ராயுடு விமர்சித்துள்ளார்.

எனவே அழுத்தமான சூழ்நிலைகளில் இப்படி நட்சத்திர வீரர்கள் இளம் வீரர்களை விளையாட விட்டு வேடிக்கை பார்ப்பதாலேயே ஆர்சிபி கோப்பையை வெல்ல முடியாமல் திணறுவதாகவும் ராயுடு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இப்போட்டியில் அழுத்தமான சூழ்நிலையில் அவர்களுக்கு யார் பேட்டிங் செய்தார் என்பதை பாருங்கள். இளம் இந்திய வீரர்கள் மற்றும் தினேஷ் கார்த்திக். ஆனால் அந்த இடத்தில் உங்களுடைய பெரிய பெயரைக் கொண்ட சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய வீரர்கள்தான் அழுத்தத்தை ஏற்க வேண்டும். அவர்கள் எங்கே? அவர்கள் உடைமாற்றும் அறையில் உட்கார்ந்திருக்கின்றனர்.

இதுதான் இந்த அணியில் 16 வருடமாக நடந்து வருகிறது. இது அவர்களுடைய கதையாகும். அழுத்தம் நிலவும்போது அங்கே பெரிய பெயரைக் கொண்ட வீரர்களை நம்மால் பார்க்க முடியவில்லை. அனைத்து இளம் வீரர்களும் லோயர் ஆர்டரில் விளையாடுகின்றனர். பெரிய பெயரைக் கொண்ட வீரர்கள் டாப் ஆடரில் விளையாடுகின்றனர். இது போன்ற அணி எப்போதும் வெல்லப் போவதில்லை. இந்த காரணத்தாலேயே அவர்கள் இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வெல்லவில்லை" என்று கூறினார்.

மேலும் செய்திகள்