147 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் அறிமுக போட்டியிலேயே உலக சாதனை படைத்த இலங்கை வீரர்
|இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியில் அறிமுக வீரராக மிலன் ரத்நாயகே இடம் பிடித்தார்.
மான்செஸ்டர்,
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் மான்செஸ்டரில் நேற்று தொடங்கியது. இலங்கை அணியில் அறிமுக வீரராக வேகப்பந்து வீச்சாளர் மிலன் ரத்னநாயகே இடம் பிடித்தார்.
இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கருணாரத்னே (2 ரன்), நிஷான் மதுஷ்கா (4 ரன்), மேத்யூஸ் (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். பந்து வீச்சுக்கு உகந்த மேகமூட்டமான சீதோஷ்ண நிலையை இங்கிலாந்து பவுலர்கள் சரியாக பயன்படுத்தி குடைச்சல் கொடுத்தனர். குசல் மென்டிஸ் (24 ரன்), சன்டிமாலும் (17 ரன்) நிலைக்கவில்லை. மிடில் வரிசையில் கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா நெருக்கடியை சமாளித்து 74 ரன்கள் (84 பந்து, 8 பவுண்டரி) எடுத்தார்.
பின்வரிசையில் புதுமுக வீரர் மிலன் ரத்நாயகே அரைசதம் விளாசி அணியின் ஸ்கோர் 200-ஐ கடக்க வைத்தார். ரத்நாயகே 72 ரன்களில் ஆட்டமிழந்தார். முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 74 ஓவர்களில் 236 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ், சோயிப் பஷீர் தலா 3 விக்கெட்டும், அட்கின்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 22 ரன் எடுத்துள்ளது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
முன்னதாக இந்த இன்னிங்சில் 9-வது வரிசையில் களமிறங்கிய இலங்கை அறிமுக வீரர் மிலன் ரத்நாயகே 72 ரன்கள் அடித்தார். இதன் மூலம் 147 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் 9-வது வரிசையில் அறிமுக வீரராக களமிறங்கி அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற உலக சாதனையை மிலன் ரத்நாயகே படைத்துள்ளார். இதற்கு முன்னர் இந்திய வீரர் பல்விந்தர் சந்து 71 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை தகர்த்துள்ள மிலன் புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.