< Back
கிரிக்கெட்
தர்மசாலாவில் வரலாற்று சிறப்புமிக்க ஒருநாள் - சச்சின்
கிரிக்கெட்

தர்மசாலாவில் வரலாற்று சிறப்புமிக்க ஒருநாள் - சச்சின்

தினத்தந்தி
|
7 March 2024 1:13 PM IST

அஸ்வின் மற்றும் பேர்ஸ்டோ தங்களது 100-வது டெஸ்ட் போட்டியில் இன்று களமிறங்கி உள்ளனர்.

தர்மசாலா,

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி தற்போது வரை 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் அடித்துள்ளது.

இதில் இந்திய நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மற்றும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் தங்களது 100-வது டெஸ்ட் போட்டியில் இன்று களமிறங்கி உள்ளனர்.

அஸ்வினுக்கு 100-வது போட்டியில் பயிற்சியாளர் மற்றும் ஜாம்பவான் ராகுல் டிராவிட் ஸ்பெஷல் தொப்பியை பரிசளித்து கவுரவித்தார். அதை தன்னுடைய குடும்பத்துடன் சேர்ந்து வாங்கிய அஸ்வின் தொப்பியை தன்னுடைய மகள்களின் கைகளில் கொடுத்து அழகு பார்த்தது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது. மேலும் போட்டி துவங்குவதற்கு முன்பாக இந்திய வீரர்கள் இருபக்கமும் நின்று கைதட்டி பாராட்டி வரவேற்ற நிலையில் கேப்டன் ரோகித் சர்மா அணியை முன்னிலைப்படுத்தும் கவுரவத்தை அஸ்வினுக்கு வழங்கினார்.

மறுபுறம் இதே நாளில் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவும் தன்னுடைய 100-வது போட்டியில் விளையாடி சாதனை படைத்தார். இங்கிலாந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் விக்கெட் கீப்பராகவும் விளையாடி வரும் அவருக்கு 100-வது டெஸ்ட் போட்டிக்கான தொப்பியை ஜோ ரூட் வழங்கி கவுரவித்தார். அதை தன்னுடைய குடும்பத்தினர் முன்னிலையில் கண்ணீருடன் வாங்கிய ஜானி பேர்ஸ்டோவுக்கு இந்திய வீரர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் 100-வது போட்டியில் விளையாடும் இந்த 2 வீரர்களுக்கும் பாகுபாடு இல்லாமல் இந்திய ஜாம்பவான் சச்சின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்க்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு:-

"இது தர்மசாலாவில் வரலாற்று சிறப்புமிக்க ஒருநாள். ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் தங்களுடைய சர்வதேச டெஸ்ட் ஜெர்சியை 100-வது முறையாக அணிந்துள்ளனர். இது டெஸ்ட் கிரிக்கெட் மீதான அவர்களின் ஆர்வம் மற்றும் விடாமுயற்சியை பற்றி பேசும் நம்ப முடியாத சாதனை. இருவரும் சிறப்பாக விளையாட வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்