"99.99 சதவீதம் தோனி எடுக்கும் முடிவுகள் சரியானதாகத்தான் இருக்கும்" - அம்பதி ராயுடு
|அம்பதி ராயுடு, ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக தோனி தலைமையில் விளையாடியுள்ளார்.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுபவர் தோனி. இவரது தலைமையிலான இந்திய அணி ஐசிசி டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 உலகக்கோப்பைகளை வென்றுள்ளது. ஐபிஎல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு 5 கோப்பைகளை வென்றுள்ளார்.
இந்நிலையில் கேப்டனாக தோனி எடுக்கும் முடிவுகள் 99.99 சதவீதம் வெற்றிகளை கண்டுள்ளதாக இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. "எந்த வகையான கிரிக்கெட்டாக இருந்தாலும் வீரர்களிடம் இருக்கும் சிறந்த திறமையை தோனி வெளிக்கொணர்வார் என்பதை அனைவரும் அறிவார்கள். சென்னை அணியில் விளையாடிய சில வெளிநாட்டு வீரர்களின் திறமையை கூட தோனி சிறப்பாக வெளிக்கொண்டு வந்துள்ளார். அந்தப் பண்பு அவரிடம் இயற்கையாகவே இருக்கிறது. அதை எப்படி வெளிப்படுத்துவது என்பது கூட அவருக்கு தெரியாது. ஒருவேளை அவர் அந்த திறமையை ஆசீர்வாதமாக பெற்றிருக்கலாம் அல்லது நீண்ட காலமாக கிரிக்கெட்டில் விளையாடுவதால் கொண்டிருக்கலாம்.
பெரும்பாலான தருணங்களில் நான் நினைக்காதவற்றை எப்படி அவர் செய்கிறார் என்று ஆச்சரியமாக பார்ப்பேன். மேலும் நாளின் முடிவில் 99.99 சதவீதம் தருணங்களில் அவர் சரியான முடிவுகளையே எடுத்திருப்பார். அதை அவர் நீண்ட காலமாக வெற்றிகரமாக செய்து வருகிறார். அதனால் இந்திய கிரிக்கெட்டில் எந்த இடத்தில் இருக்கும் நபராலும் அவருடைய முடிவுகளை கேள்வி கேட்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் அவர் நீண்ட காலமாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார்" என்று கூறினார்.