92 ஆண்டு கால வரலாற்றை மாற்றிய நியூசிலாந்து
|நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா இடையே 1932 முதல் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
ஹாமில்டன்,
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது.
இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் கடந்த 13ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் முறையே தென் ஆப்பிரிக்கா 242 ரன்னும், நியூசிலாந்து 211 ரன்னும் எடுத்தன.
இதையடுத்து 31 ரன் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 69.5 ஓவர்களில் 235 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 267 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து தனது 2வது இன்னிங்சை தொடங்கியது.
நியூசிலாந்து அணி வில்லியம்சன் சதத்தின் உதவியுடன் 94.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 269 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றி தென் ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது.
இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இதுவரை டெஸ்ட் தொடரை வென்றது இல்லை என்ற 92 ஆண்டு கால மோசாமான வரலாற்றை நியூசிலாந்து அணி மாற்றியுள்ளது . நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா இடையே 1932 முதல் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை அந்த அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற மோசமான வரலாற்றிற்கு தற்போதுதான் நியூசிலாந்து முற்றுப்புள்ளி வைத்துள்ளது.