2027-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கு தென்ஆப்பிரிக்காவில் 8 இடங்கள் தேர்வு
|உலகக் கோப்பை போட்டியை தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமிபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன
ஜோகன்னஸ்பர்க்,
14 அணிகள் பங்கேற்கும் 14-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை (50 ஓவர்) 2027-ம் ஆண்டில் ஆப்பிரிக்க நாடுகளான தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமிபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. பெரும்பாலான ஆட்டங்கள் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள நிலையில் அங்கு போட்டிக்கான இடங்களை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது. இதன்படி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வான்டரர்ஸ், பிரிட்டோரியா செஞ்சூரியன் பார்க், டர்பனில் உள்ள கிங்ஸ்ஸ்மீட், கெபஹாவின் செயின்ட் ஜார்ஜ்ஸ் பார்க், பார்லில் உள்ள போலன்ட் பார்க், கேப்டவுனின் நியூலாண்ட்ஸ், புளோம்பாண்டீன், ஈஸ்ட் லண்டனில் உள்ள பப்பலோ பார்க் ஆகிய 8 மைதானங்களில் உலகக் கோப்பை போட்டி நடைபெற உள்ளது.
விமான நிலையம் மற்றும் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் தங்குவதற்கு அதிகமான ஓட்டல் அறை தேவை உள்ளிட்ட வசதி வாய்ப்புகளை பரிசீலித்து அதற்கு ஏற்ப போட்டிக்குரிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டதாக தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி பெலெட்சி மோசிகி தெரிவித்தார்.