50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்; ஆஸ்திரேலிய அணியில் மார்னஸ் லாபுசாக்னேவுக்கு இடமில்லை
|50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய உத்தேச அணியில் மார்னஸ் லாபுசாக்னேவுக்கு இடம் அளிக்கப்படவில்லை.
சிட்னி,
புதுமுக வீரர்களுக்கு இடம்
13-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை நடக்கிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கான 18 பேர் கொண்ட ஆஸ்திரேலிய உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து 15 பேர் கொண்ட அணி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிமுறைப்படி செப்டம்பர் 28-ந் தேதிக்கு முன்னதாக இறுதி செய்யப்படும்.
ஆஸ்திரேலிய அணியில் புதுமுக வீரர்களாக சுழற்பந்து வீச்சாளர் தன்வீர் சங்கா, ஆல்-ரவுண்டர் ஆரோன் ஹார்டி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். நிலைத்து நின்று ஆடக்கூடிய பேட்ஸ்மேன் மார்னஸ் லாபுசாக்னே அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
ஒருநாள் போட்டி அணி வீரர்கள்
ஆஸ்திரேலிய ஒருநாள் போட்டி அணி வருமாறு:-
கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அப்போட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, ஸ்டீவன் சுமித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா.
உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதலாவது 20 ஓவர் போட்டி டர்பனில் வருகிற 30-ந் தேதி நடக்கிறது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி அடுத்த மாதம் (செப்டம்பர்) இந்தியா வந்து 3 ஒருநாள் போட்டியில் ஆடுகிறது.
தென்ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் உலகக் கோப்பை போட்டிக்கான உத்தேச அணியே களம் இறங்குகிறது. ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்டின் போது, பீல்டிங் செய்கையில் இடது மணிக்கட்டில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் கேப்டன் கம்மின்சுக்கு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் தொடரின் போது அணியினருடன் இணைகிறார். ஆல்-ரவுண்டர் மேக்ஸ்வெல்லின் மனைவி கர்ப்பமாக இருக்கிறார். அவரை அருகில் இருந்து கவனிப்பதற்காக மேக்ஸ்வெல் தென்ஆப்பிரிக்க ஒரு நாள் தொடரை தவிர்க்கிறார். அதே சமயம் 20 ஓவர் போட்டி மற்றும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுகிறார்.
20 ஓவர் அணிக்கு மார்ஷ் கேப்டன்
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் கம்மின்ஸ் காயத்தில் சிக்கி இருப்பதால் ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், வார்னர் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய 20 ஓவர் அணி வருமாறு:
மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அப்போட், ஜாசன் பெரன்டோர்ப், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், ஸ்பென்சர் ஜான்சன், மேக்ஸ்வெல், மேட் ஷார்ட், ஸ்டீவன் சுமித், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆடம் ஜம்பா.