5 ரன் பெனால்டி...இந்தியாவின் வெற்றிக்கு காரணமான புதிய விதி - முழு விவரம்
|அமெரிக்காவுக்கு எதிராக வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.
நியூயார்க்,
9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 'ஏ' பிரிவு ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, அமெரிக்காவை சந்தித்தது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய அமெரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. அமெரிக்கா தரப்பில் அதிகபட்சமாக நிதிஷ் குமார் 27 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 111 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 111 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் சூர்யகுமார் யாதவ் 50 ரன்கள் அடித்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.
இந்த ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் இந்திய அணிக்கு 30 பந்துகளில் 36 ரன்கள் தேவைப்பட்டது. அந்த சூழ்நிலையில் தான் அமெரிக்க அணி ஒரு தவறை செய்து ஐந்து ரன்களை இந்திய அணிக்கு இலவசமாக கொடுத்தது. நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஒரு ஓவரை முடித்த பின் அடுத்த ஓவரை 60 வினாடிகளுக்குள் வீச தொடங்கி விட வேண்டும் என்ற புதிய விதி கொண்டு வரப்பட்டிருக்கிறது. இந்த விதியை நீங்கள் ஒரு போட்டியில் மூன்று முறை மீறினால், உங்களுக்கு ஐந்து ரன்கள் பெனாலிட்டியாக கொடுக்கப்படும் என்று விதி கூறுகிறது.
இந்த வகையில் இன்று அமெரிக்க அணி மூன்று முறை தாமதமாக ஓவர்களை வீச தொடங்கியது. இதன் காரணமாக இந்திய அணிக்கு ஐந்து ரன்கள் இலவசமாக கிடைத்தது. இதனால் இந்திய அணி 30 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தால் போதும் என்கின்ற நிலை உருவானது. இறுதியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்க அணியை வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.