< Back
கிரிக்கெட்
நம்பர் அடிப்படையில் விராட் கோலிக்கு 4-வது இடம்.. ஆனால்.. - ஆஸ்திரேலிய வீராங்கனை
கிரிக்கெட்

நம்பர் அடிப்படையில் விராட் கோலிக்கு 4-வது இடம்.. ஆனால்.. - ஆஸ்திரேலிய வீராங்கனை

தினத்தந்தி
|
6 Sept 2024 7:27 PM IST

பேப் 4 பேட்ஸ்மேன்களில் புள்ளி விவரங்கள் அடிப்படையில் ஜோ ரூட் நம்பர் 1 இடத்தில் இருப்பதாக அலிசா ஹீலி கூறியுள்ளார்.

சிட்னி,

நவீன கிரிக்கெட் உலகில் விராட் கோலி, ஸ்டீவ் சுமித், ஜோ ரூட் ஆகியோருடன் நியூசிலாந்தை சேர்ந்த கேன் வில்லியம்சனும் சிறந்த பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார். அந்த நால்வரையும் பேப் 4 பேட்ஸ்மேன்கள் என்று வல்லுனர்கள் பாராட்டுவது வழக்கமாகும். இதில் ஜோ ரூட் மற்ற 3 பேரையும் விட டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

அதனால் இந்தியாவின் விராட் கோலியை விட ஜோ ரூட் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் சமீபத்தில் பாராட்டினார். மேலும் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை முந்தி ஜோ ரூட் உலக சாதனை படைப்பார் என்றும் அவர் உறுதியான கணிப்பை தெரிவித்துள்ளார். அதனால் ஜோ ரூட் - விராட் கோலி ஆகியோரில் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற விவாதங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் பேப் 4 பேட்ஸ்மேன்களில் புள்ளி விவரங்கள் அடிப்படையில் ஜோ ரூட் நம்பர் ஒன் இடத்தில் இருப்பதாக ஆஸ்திரேலிய வீராங்கனை அலிசா ஹீலி கூறியுள்ளார். ஆனால் தரத்தின் அடிப்படையில் விராட் கோலிதான் நம்பர் 1 இடத்தில் இருப்பதாக அவர் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு:-

"நம்பர் அடிப்படையில் பேசினால் நான் விராட் கோலியை நான்காவது இடத்தில் வைப்பேன். ஆனால் தரத்தின் அடிப்படையில் மற்றவர்களை விட அவரை நான் முதலிடத்தில் வைப்பேன். இருப்பினும் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் அவர் நான்காவது இடத்தில் இருக்கிறார். பேப் 4 பேட்ஸ்மேன்களின் கேன் வில்லியம்சன் மொத்த நியூசிலாந்து அணியை வழி நடத்துகிறார். விராட் கோலி இந்த உலகில் மகத்தான வீரர் என்பது உண்மையாகும்.

அதே சமயம் அவரை போன்ற வீரர்களும் உள்ளனர். ரோகித் சர்மா சதங்கள் அடிக்கக் கூடியவர். கேஎல் ராகுல் சதமடிப்பார். ஜடேஜாவும் 8வது இடத்தில் சதமடித்துள்ளார். விராட் கோலி விளையாடும் அணியில் யாரேனும் ஒரு பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்கின்றனர். ஆனால் வில்லியம்சன் ரன்கள் அடிக்கவில்லையெனில் நியூசிலாந்து எப்போதும் வெற்றியை நெருங்காது" என்று கூறினார்.

மேலும் செய்திகள்