147 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் 3-வது முறை...சாதனை படைத்த டி சில்வா - கமிந்து மெண்டிஸ் இணை
|வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் டி சில்வா - கமிந்து மெண்டிஸ் இணை 150 ரன்களுக்கு மேல் குவித்தது.
சில்ஹெட்,
வங்காளதேசம் -இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சில்ஹெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை 280 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக தனஞ்சயா டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் சதமடித்து அசத்தினர். வங்காளதேச அணி தரப்பில் அதிகபட்சமாக கலீத் அகமது மற்றும் நஹித் ராணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம், இலங்கை அணியின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 188 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணிக்கு மீண்டும் டி சில்வா - கமிந்து மெண்டிஸ் பார்ட்னர்ஷிப்தான் கை கொடுத்தது. முதல் இன்னிங்சை போலவே இருவரும் சதமடித்து அசத்தினர். இதன் மூலம் இலங்கை அணி வங்காளதேசத்தை விட வலுவான முன்னிலையில் உள்ளது.
இந்த போட்டியின் 2 இன்னிங்சிலும் 150 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த டி சில்வா - கமிந்து மெண்டிஸ் இணை 147 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. அதாவது 147 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் ஒரு டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் 150 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த 3-வது ஜோடி என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளது.
இந்த சாதனையை முதலில் 1938-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்தின் எடி பெய்ண்டர் - பால் கிப் இணை படைத்தது.
2-வதாக நியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் - ஜோ பர்ன்ஸ் இணை கடந்த 2015-ம் ஆண்டு படைத்தது.
தற்போது 3-வது முறையாக டி சில்வா - கமிந்து மெண்டிஸ் இணை படைத்துள்ளது.