3வது டெஸ்ட்; ரோகித், ஜடேஜாவை போலவே இரக்கமின்றி விளையாட வேண்டும் - இங்கிலாந்துக்கு முன்னாள் வீரர் அறிவுரை
|இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
ராஜ்கோட்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று தொடங்கியது . இந்த போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா , ஜெய்ஸ்வால் களமிறங்கினர். இதில் ஜெய்ஸ்வால் 10 ரன்களில் மார்க் வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சுப்மன் கில், மார்க் வுட் பந்துவீச்சில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து வந்த ரஜத் படிதாரும் 5 ரன்களில் வெளியேறினார்.
இதனால் இந்திய அணி அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து ரோகித்துடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா இந்த தொடரில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்தார்.
மறுமுனையில் ஜடேஜா அரை சதம் அடித்து அசத்தினார். சதம் அடித்த பிறகும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 131 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். ரோகித்துக்கு பின் களமிறங்கிய அறிமுக வீரர் சர்பராஸ் கான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம் அடித்து அசத்திய அவர் 66 பந்துகளில் 62 ரன்கள் எடுத்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டில் வெளியேறினார்.
சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜா சதம் அடித்து அசத்தினார். முதல் நாளில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்கள் குவித்துள்ளது. ஜடேஜா 110 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 3 விக்கெட்டுகளும், டாம் ஹார்ட்லி 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்திய அணியை முதல் இன்னிங்சில் ஆல் அவுட் செய்த பின்னர் பேட்டிங்-க்கு சாதகமாக இருக்கும் ராஜ்கோட் மைதானத்தில் இந்திய பவுலர்களுக்கு கருணை காட்டாமல் இரக்கமின்றி இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கி சதமடித்தால் எளிதாக வெற்றி பெற முடியும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் நாசர் ஹூசைன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்திய அணியின் லோயர் மிடில் ஆர்டரை விரைவில் இங்கிலாந்து முடிக்க வேண்டும். அதற்கான வாய்ப்பு 2வது நாள் காலையில் இருக்கிறது. குறிப்பாக இந்திய அணியை 400 ரன்களுக்குள் அவர்கள் ஆல் அவுட் செய்ய வேண்டும்.
இந்தத் தொடர் முழுவதும் இந்தியா பேட்டிங்கில் சற்று சொதப்பலாக செயல்பட்டு வருகிறது. அவர்களுடைய பேட்ஸ்மேன்கள் எளிதாக தங்களுடைய விக்கெட்டை இங்கிலாந்துக்கு பரிசளித்தனர். இருப்பினும் இம்முறை ரோகித் சர்மா கேட்ச் தவற விட்ட பின் தன்னுடைய விக்கெட்டை எளிதாக கொடுக்க மறுத்தார்.
இது போன்ற மைதானத்தில் முதல் இன்னிங்சில் அடிக்கும் ரன்கள் முக்கியம். இந்தியா ஏற்கனவே இரண்டு சதங்கள் அடித்து நன்றாக செயல்பட்டுள்ளது. எனவே இங்கிலாந்து பேட்டிங் செய்ய வரும் போது ரோகித் மற்றும் ஜடேஜாவை போலவே இரக்கமின்றி விளையாட வேண்டும். கடந்த போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் 20, 30, 40 போன்ற ரன்களை அடித்தனர். ஆனால் டெஸ்ட் போட்டியை வெல்ல நீங்கள் பெரிய சதங்கள் அடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.