3-வது டெஸ்ட்: பதும் நிசங்கா அபார சதம்... இங்கிலாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற இலங்கை
|இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அபார வெற்றி பெற்றது.
லண்டன்,
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் 2 போட்டிகளின் முடிவிலேயே இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் கடந்த 6-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்து வீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 325 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை 61.2 ஓவர்களில் 263 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக டி சில்வா 69 ரன்களிலும், கமிந்து மென்டிஸ் 64 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து 62 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி, இலங்கையின் வேகப்பந்து வீச்சு தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 34 ஓவர்களில் 156 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் 67 ரன்கள் அடித்தார். இலங்கை தரப்பில் அதிகபட்சமாக லஹிரு குமாரா 4 விக்கெட்டுகளும், விஷ்வா பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.
பின்னர் 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 94 ரன்கள் எடுத்திருந்தது. குசால் மெண்டிஸ் 30 ரன்களுடனும், நிசங்கா 53 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை அணி மெண்டிசின் விக்கெட்டை மட்டுமே இழந்து 219 ரன்கள் அடித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பதும் நிசங்கா சதம் அடித்து 127 ரன்கள் குவித்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த மேத்யூஸ் 32 ரன்கள் அடித்தார்.
ஏற்கனவே தொடரை இழந்து விட்ட இலங்கைக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்துள்ளது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.