< Back
கிரிக்கெட்
3-வது டெஸ்ட்; கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடிய இந்திய வீரர்கள் -  என்ன காரணம் தெரியுமா?

Image Courtesy: AFP

கிரிக்கெட்

3-வது டெஸ்ட்; கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடிய இந்திய வீரர்கள் - என்ன காரணம் தெரியுமா?

தினத்தந்தி
|
17 Feb 2024 4:32 PM IST

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது.

ராஜ்கோட்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி ரோகித் மற்றும் ஜடேஜா ஆகியோரின் சதத்தின் மூலம் முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் 3ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி இந்தியாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 319 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் சிராஜ் 4 விக்கெட்டும், குல்தீப், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 126 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது 2வது இன்னிங்சை ஆடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் இன்றைய 3ம் நாள் ஆட்டத்தின்போது இந்திய வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.

இந்திய வீரர்கள் ஏன் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர் என ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இந்திய வீரர்கள் ஏன் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர் என இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ) தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இது தொடர்பான பதிவில்,

சமீபத்தில் காலமான இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்தியாவின் மூத்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருமான தத்தாஜிராவ் கெய்க்வாட்டின் நினைவாக, இந்திய அணியினர் கையில் கருப்பு பட்டை அணிந்துள்ளனர் என பதிவிடப்பட்டிருந்தது. கடந்த 13-ந்தேதி இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மிகவும் வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரராக வாழ்ந்தவருமான தத்தாஜிராவ் கெய்க்வாட் தனது 95 வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்திய வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடியது குறித்து இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, தலைசிறந்த வீரருக்காக இந்திய வீரர்கள் முதல்நாள் ஆட்டத்தின்போது இதை செய்திருக்க வேண்டும். இது மிகவும் காலதாமதமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்