இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்; கே.எல்.ராகுல் விலகல்..? - இந்திய அணியில் இடம் பிடிக்கும் இளம் வீரர் - வெளியான தகவல்
|இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது.
புதுடெல்லி,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் இரு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன.
இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய முன்னணி பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய ராகுல் 2வது போட்டியில் காயம் காரணமாக விளையாடவில்லை. இதையடுத்து 3வது டெஸ்ட் போட்டியில் ராகுல் விளையாடுவாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த வேளையில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் கே.எல்.ராகுல் இடம் பெற்றிருந்தார்.
ஆனாலும், கே.எல்.ராகுல் காயத்திலிருந்து முழுவதுமாக குணமடைந்தால் மட்டுமே விளையாடும் அணியில் இடம்பெறுவார் என பி.சி.சி.ஐ. அறிவித்திருந்தது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து கே.எல்.ராகுல் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பதிலாக இந்திய அணியில் தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.