வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3வது டி20 போட்டி; ஹேசில்வுட் விலகல் - காரணம் என்ன?
|ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.
பெர்த்,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் அந்த இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது.
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை பெர்த்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் நாளை நடைபெற உள்ள ஆட்டத்திலிருந்து ஆஸ்திரேலிய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் விலகி உள்ளார்.
எதிர்வரும் நியூசிலாந்து தொடருக்கு தயாராகும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், ஹேசில்வுட்டிற்கு பதிலாக 3வது டி20 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் ஜேக் ப்ரேசர்-மெக்குர்க், வெஸ் அகர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.