3வது டி20 போட்டி; வங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை
|இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது போட்டி வரும் 13-ந் தேதி சட்டோகிராமில் நடக்கிறது.
சில்ஹெட்,
இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக டி20 தொடர் நடைபெற்றது. இதில் 2 போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றிருந்தன.
இந்நிலையில் டி20 தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற வங்காளதேசம் பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் குசல் மென்டிஸ் 86 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். வங்காளதேசம் தரப்பில் தஸ்கின் அகமது, ரிஷாத் ஹூசைன் தலா 2 விக்கெட்டும், ஷோரிபுல் இஸ்லாம், முஸ்தாபிஜூர் ரகுமான் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேச அணி, இலங்கை வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் 146 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இலங்கை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரிஷாத் ஹூசைன் 53 ரன்கள் எடுத்தார்.
இலங்கை அணியில் நுவான் துஷாரா 5 விக்கெட்டும், கேப்டன் ஹசரங்கா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இலங்கை வீரர்கள் துஷாரா ஆட்டநாயகன் விருதையும், குசல் மென்டிஸ் தொடர் நாயகன் விருதையும் தட்டிச்சென்றனர். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது போட்டி வரும் 13-ந் தேதி சட்டோகிராமில் நடக்கிறது.