கடைசி ஒருநாள் போட்டி: நியூசிலாந்து 'ஏ' அணியை வீழ்த்தி இந்திய 'ஏ' அணி அபார வெற்றி
|இந்தியா 'ஏ' அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி நியூசிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்து அசத்தியுள்ளது.
சென்னை,
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து ஏ அணி, இந்திய ஏ அணியுடன் அதிகாரப்பூர்வமற்ற முறையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. முதல் இரு ஒருநாள் போட்டிகளில் இந்திய ஏ அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இன்று 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணி முதலில் பேட் செய்தது. 49.3 ஓவர்களில் 284 ரன்களுக்கு அந்த அணி ஆல்-அவுட் ஆனது. சஞ்சு சாம்சன் 54 ரன்னும், ஷர்துல் தாக்குர் 51 ரன்னும், திலக் வர்மா 50 ரன்னும் எடுத்தனர். அதன்பின், 285 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து ஏ அணி 38.3 ஓவர்களில் 178 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்மூலம் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ஏ அணி வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் ராஜ் பாவா 4 விக்கெட்டும், ராகுல் சஹார், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 'ஏ' அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி நியூசிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்து அசத்தியுள்ளது.