3வது ஒருநாள் போட்டி; நபி அபார பந்துவீச்சு - அயர்லாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஆப்கானிஸ்தான்
|ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய முகமது நபி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ஷார்ஜா,
ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் 2 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி 1-0 என தொடரில் முன்னிலையில் இருந்தது. 2வது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஆப்கானிஸ்தான் தரப்பில் ஷாகிடி 69 ரன், குர்பாஸ் 51 ரன் எடுத்தனர். அயர்லாந்து தரப்பில் மார்க் அடெய்ர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 237 ரன்கள் எடுத்தால் தொடரை சமன் செய்யலாம் என்ற நிலையில் அயர்லாந்து அணி களம் இறங்கியது.
அயர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பால்பிர்னி, பால் ஸ்டிர்லிங் ஆகியோர் களம் இறங்கினர். இதில் பால்பிர்னி 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து ஸ்டிர்லிங்குடன் கர்டிஸ் கேம்பர் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர்.
இதில் ஸ்டிர்லிங் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 50 ரன்கள் எடுத்த நிலையிலும், கேம்பர் 43 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இறுதியில் அயர்லாந்து 35 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 119 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் 117 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ஆப்கானிஸ்தான் தரப்பில் அபாரமாக பந்துவீசிய முகமது நபி 5 விக்கெட்டும், நங்யால் கரோட்டி 4 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் 15ம் தேதி தொடங்குகிறது.