3வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து மகளிர் அணிக்கு 170 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்திய அணி
|இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 இந்திய வீராங்கனைகள் டக்-அவுட் ஆனார்கள்.
லண்டன்,
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. அடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி ஏற்கனவே கைப்பற்றி உள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியுடன் இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதன்படி இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இதில் 5 வீராங்கனைகள் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் அரைசதம் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் கேட் கிராஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இறுதியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்கள் எடுத்தது. இதனால் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கி உள்ளது.