3-வது ஒரு நாள் போட்டி: ஜிம்பாப்வே அணிக்கு 290 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்திய அணி - சுப்மன் கில் சதம் அடித்து அசத்தல்...!
|ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 289 ரன்கள் குவித்தது.
ஹராரே,
இந்திய கிரிக்கெட் அணியின் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. அந்த நாட்டு அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் சொந்தமாக்கி விட்டது. இந்த நிலையில் இந்தியா- ஜிம்பாப்வே இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஹராரேவில் இன்று நடைபெறுகிறது.
இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இந்திய அணியில் இரு மாற்றமாக முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக தீபக் சாஹர் மற்றும் அவேஷ் கான் சேர்க்கப்பட்டனர். இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் மற்றும் கே.எல் ராகுல் களம் இறங்கினர். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் கே.எல் ராகுல் 30 ரன்களில் போல்டு ஆனார்.
அடுத்த சில ஓவர்களிலேயே தவான் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு கில்லுடன் இஷன் கிஷான் இணந்தார். சிறப்பாக ஆடிய இஷன் கிஷான் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த இஷன் 50(61) அடுத்த ஓவரிலேயே ரன் - அவுட் ஆனார். அடுத்து வந்த தீபக் ஹூடா 1(3) வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார்.
அதன் பின்னர் சாம்சன் களம் இறங்கினார். அதிரடியாக ஆடிய சுப்மன் கில் இந்திய அணிக்காக தனது முதல் சதத்தை பதிவு செய்தார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் சுப்மன் கில் 130 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது. 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி ஆட உள்ளது.